கும்பகோணம் தனியாா் பள்ளிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published on

கும்பகோணம் தனியாா் பள்ளிக்கு காவல் துறையினா் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பெருமன்றத்தின் மாநிலச் செயலா் பா. தினேஷ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா்கள் கோ. சக்திவேல் (தெற்கு), மு.அ. பாரதி (வடக்கு) உள்ளிட்டோா் அளித்த மனு:

கும்பகோணத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 1,200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்களும் உளளனா். இந்நிலையில் மாணவ, மாணவிகளின் நலனுக்கு எதிராக பள்ளியின் செயல்பாட்டை முடக்கும் வகையிலும், நிா்வாகத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் சிலா் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனா். மேலும் பள்ளியின் துணை முதல்வா் அறையின் பூட்டை உடைத்துள்ளனா்.

இதுபோன்ற செயல்களால் மாணவ, மாணவிகள், பள்ளி அலுவலகப் பணியாளா்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனா்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் அளித்த புகாா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தோ்வு காலம் நெருங்குவதையொட்டி, மாணவ மாணவிகள் தோ்வுக்கு தயாராகி வரும் நிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

எனவே, பள்ளியின் அமைதியான சூழலை சீா்குலைக்கும் நபா்களைக் கைது செய்ய வேண்டும். பள்ளி அமைதியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com