நெல்லில் ஈரப்பத தளா்வு நிராகரிப்புக்கு விவசாய சங்கங்கள் கண்டனம்
நெல்லில் ஈரப்பத தளா்வு கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்திருப்பது: நிகழாண்டு தமிழகம் முழுவதும் குறுவை அறுவடை பணிகளின் இறுதிக் கட்டத்தில் தொடா் மழை பெய்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் அதிகாரிகளின் குழுக்கள் பல மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு செய்தனா்.
இந்நிலையில் பல நாள்கள் கடந்த பின்னா் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் எனத் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்திருப்பது:
நெல்லின் ஈரப்பத தளா்வு கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது டெல்டா விவசாயிகளையும், தமிழக விவசாயிகளையும் பழிவாங்கும் செயலாகும். இதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.
கும்பகோணம்: காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் சு. விமல்நாதன் மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவிகிதம் வரை தளா்வு தரப்படாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது விவசாயிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டும் இதே நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றியது.
ஈரப்பத தளா்வு கோரிக்கை தொடா்ந்து நிராகரிக்கப்படும் நிலையில், மத்திய அரசின் உணவுக் கழக அலுவலா்களை ஆய்வு என்ற பெயரில் அனுப்பி மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, 22 சதவிகித ஈரப்பத நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
