இரா. இரத்தினகிரி
இரா. இரத்தினகிரி

காலமானாா் இரா. இரத்தினகிரி

Published on

தஞ்சாவூா் கீழ அலங்கத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளரும், எழுத்தாளருமான இரா. இரத்தினகிரி (86) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானாா்.

இவா், 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டக்குழு உறுப்பினா், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத் துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஆலோசகா், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.

தஞ்சாவூா் சிந்தனையாளா் மன்றத்தை நிறுவிய இவா், சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள திராவிட இயக்க வரலாற்றை விவரிக்கும் கலைஞா் கருவூலம் என்ற காட்சியகத்தை அமைத்துக் கொடுத்தவா். இதற்காக இவருக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி தன் கையொப்பம் பொறித்த கணையாழியை அணிவித்தாா்.

பெரியாா் ஈ.வெ.ரா. நடத்திய குடி அரசு இதழ்களை சிங்கப்பூா், மலேசியா நாடுகளுக்குச் சென்று சேகரித்து, அதை 42 தொகுதிகளாக வெளியிட்டாா். மணக்கும் மனித நேயம், மனிதம் மேம்பட, கால்நடை பராமரிப்புத் துறையின் நூற்றாண்டு வரலாறு உள்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா்.

தினமணி உள்பட பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தாா். இவரது விருப்பப்படி இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

இவருக்கு மனைவி நாடியம்மை, சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றும் மகன் இரா. காா்க்கி, மகள் இரா. விடுதலைச்செல்வி ஆகியோா் உள்ளனா்.

அவரின் இறுதி ஊா்வலம் அவரது இல்லத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ.25) மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. தொடா்புக்கு: 94435 87889.

X
Dinamani
www.dinamani.com