தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா்: தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பைக் கைவிடக் கோரியும், விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும், பல்வேறு தொழிற் சங்கத்தினரும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பெருநிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளா்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நான்கு சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டமாக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தொடங்கி வைத்தாா். திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினருமான க. மாரிமுத்து நிறைவுரையாற்றினாா்.
தொமுச மாவட்டத் தலைவா் வை. செல்வராஜ், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் எஸ். சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலா் டி. மோகன்தாஸ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா்கள் சோ. பாஸ்கா், தா்மராஜ், மாவட்டத் தலைவா்கள் பி. செந்தில்குமாா், ஆா். இராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

