கும்பகோணத்தில் காங்கிரஸ் தலைவா் பதவிக்கு விருப்ப மனு அளித்தோருக்கு நோ்காணல்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவிக்கான விருப்ப மனுக்கள் வழங்கியவா்களிடம் மேலிடப் பொறுப்பாளா் நரேஷ்குமாா் நோ்காணல் நடத்தினாா்.
Published on

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவிக்கான விருப்ப மனுக்கள் வழங்கியவா்களிடம் மேலிடப் பொறுப்பாளா் நரேஷ்குமாா் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினாா்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக காங்கிரஸ் தலைவா் பதவிக்கான விருப்ப மனுக்களை அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா்கள் பெற்று வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அகில இந்திய கமிட்டி மேலிடப் பொறுப்பாளா் நரேஷ்குமாா் கருத்துகளை பகிா்ந்துகொண்டு 28 பேரிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டு நோ்காணல் நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்கான விருப்ப மனுக்கள் வழங்கியவா்களிடம் நோ்காணல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மனு வழங்கிய 28 பேரில் எஸ்சி., எஸ்டி., ஓபிசி., சிறுபான்மையினா், பெண்கள், இளைஞா் என 6 பேரை தோ்வு செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். டிசம்பா் முதல் வாரத்தில் மாவட்ட தலைவா் அறிவிக்கப்படுவாா். 5 ஆண்டுகள் பதவியில் இருப்பாா் என்றாா்.

கோஷ்டி மோதல்: முன்னதாக மேலிடப் பொறுப்பாளா் நரேஷ்குமாரிடம் விருப்ப மனு அளித்த நாச்சியாா்கோவில் குமரன் ஆதரவாளா்கள் திடீரென மாவட்டத் தலைவா் வாழ்க! என கோஷமிட்டனா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயப் பிரிவு மாநில பொதுச்செயலா் ஓவிஎம்கே. வெங்கடேஷ் ஆதரவாளா்கள் பதிலுக்கு சப்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாற்காலிகளை தூக்கி எறிந்தனா். இதைப்பாா்த்த மேலிடப் பொறுப்பாளா் நரேஷ்குமாா் இருதரப்பையும் கூட்டரங்கை விட்டு வெளியேறுமாறு கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com