தீபாவளி பண்டிகை: பாதுகாப்பு பணியில் 1,400 காவலா்கள்

Published on

தீபாவளி பண்டிகைக்காக தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கடை வீதிகளில் 1,400 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதையொட்டி, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், திருட்டை தடுப்பதற்கும் கடை வீதிகள், முதன்மைச் சாலைகளில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் தற்காலிகமாக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரைகளைக் காவல் துறையினா் வழங்கி வருகின்றனா். தஞ்சாவூா் மாநகரில் ஏறத்தாழ 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கின்றனா்.

இப்பணியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட ஏறத்தாழ 1,400 காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தீக்காயத்துக்காக 20 படுக்கைகள்:

இதனிடையே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்தில் காயமடைந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் விதமாக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் மருத்துவா்கள் 24 மணிநேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com