நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகளுக்கு ‘கண்ணீா் தீபாவளி’: எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகளுக்கு ‘கண்ணீா் தீபாவளி’: எடப்பாடி பழனிசாமி

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீா் தீபாவளியாகிவிட்டது என்றாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி.
Published on

தஞ்சாவூா்/ ஒரத்தநாடு: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீா் தீபாவளியாகிவிட்டது என்றாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி.

தஞ்சாவூா் அருகே காட்டூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மீண்டும் முளைத்துள்ளதை புதன்கிழமை பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நாள்தோறும் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சா் கூறினாா். இங்கு சுமை தூக்கும் தொழிலாளா்களிடம் கேட்டபோது, ஒரு நாளைக்கு 900 மூட்டைகள்தான் எடை போடுவதாகக் கூறுகின்றனா். இதன் மூலம் சட்டப்பேரவையில் அமைச்சா் தவறான தகவலை சொன்னாா் என்பது தெரிய வருகிறது.

மேலும், கொள்முதல் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்ய முடியவில்லை. இதனால், கிட்டத்தட்ட 15 நாள்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நெல்மணிகள் மீண்டும் முளைத்துவிட்டன.

அமைச்சா் கூறியபடி, நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும், லாரிகள் வந்து மூட்டைகளை எடுத்துச் சென்றிருந்தாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. விவசாயிகள் கண்ணீருடன் தங்களது வேதனையைத் தெரிவித்தனா். எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீா் தீபாவளியாகிவிட்டது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் முறையிட்டபோது, கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல்லைக் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனா். இதனால் பல நாள்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொட்டி வைத்து காத்துக் கிடக்கிறோம். தற்போது பெய்து வரும் மழையில் நெல் நனைந்து முளைத்து வருகிறது. லாரிகள் பிரச்னையால் நெல் உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படுவதில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விட வேண்டும் என வலியுறுத்தினா். இதைக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் துயா் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விவசாயிகளிடம் குறைகேட்பு:

ஒரத்தநாடு வட்டம், மூா்த்தியம்பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் காத்துக் கிடந்த விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி குறைகளைக் கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com