மழையில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தெற்கு மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா் தெரிவித்திருப்பது: மழை நீரில் மூழ்கி அறுவடை செய்ய இயலாத வயல்களை முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பா பயிருக்காக நடவு செய்யப்பட்டு அழுகிப்போன வயல்களையும் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு மழையால் நெல் முளைத்து காணப்படுகிறது. தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக ஈரப்பதம் பாராமல் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். லாரி, தடையில்லாமல் கொள்முதல் செய்த நெல்லை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கு மற்றும் விவசாயிகளுக்கு படுதா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.