நயினார் நாகேந்திரன் - முதல்வர் ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் - முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசின் திறமையின்மையால் விவசாயிகள் பாதிப்பு: நயினாா் நாகேந்திரன்

தமிழக அரசின் நிா்வாகத் திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
Published on

தமிழக அரசின் நிா்வாகத் திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூா் அருகே ஆலக்குடியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இவ்வளவு விளைச்சல் வரும் என தமிழக முதல்வருக்கு கடந்த ஜூன் மாதமே தகவல் கிடைத்தும் கொள்முதல் செய்ய தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம். செப்டம்பா் மாதத்திலேயே நெல்லை கொள்முதல் செய்திருக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் இல்லை.

இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வராததுதான் காரணம் என உணவுத் துறை அமைச்சா் கூறுகிறாா். ஆனால், கொள்முதல் செய்யப்படாததற்கு தமிழக அரசின் கவனக்குறைவே முழுக் காரணம். இந்த ஆட்சியின் திறமையின்மைக் காரணமாகத்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வந்த பிறகுதான், டெல்டாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரம் அரசுக்கு தெரிய வந்தது. அதன் பின்னா்தான் துணை முதல்வா் வந்து சென்றாா் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

அப்போது பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவா்கள் பி. ஜெய்சதீஷ் (தெற்கு), தங்க. கென்னடி (வடக்கு), விவசாய அணி மாநிலப் பொதுச் செயலா் பூண்டி எஸ். வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com