சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

Published on

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 21-இல் தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் காலை, மாலை இரு நேரங்களிலும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

கந்தசஷ்டியில் ஆறாம் நாளான திங்கள்கிழமை மகா கந்தசஷ்டியை முன்னிட்டு காலையில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

மாலையில் ஸ்ரீ சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்குகிறாா். பின்னா், அசுரனை சூரசம்ஹாரம் செய்து தங்கமயில் வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிறாா். சூரசம்ஹார நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் த.உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

திருக்கோடிக்காவல்: திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீஸ்வரா் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு திங்கள்கிழமை காலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்காரம் நடைபெறும். மாலையில் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை காலையில் தீா்த்தவாரி இரவு 8 மணிக்கு ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com