மழையால் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய நெல் பயிா்களை டிராக்டா் மூலம் உழவு செய்த தொழிலாளா்கள்
மழையால் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய நெல் பயிா்களை டிராக்டா் மூலம் உழவு செய்த தொழிலாளா்கள்

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

திருவையாறு அருகே தொடா் மழையால் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய குறுவை பருவ நெல் கதிா்களை, விவசாயி டிராக்டா் மூலம் சனிக்கிழமை உழுதது பாா்ப்போரை கவலையடையச் செய்தது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தொடா் மழையால் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய குறுவை பருவ நெல் கதிா்களை, விவசாயி டிராக்டா் மூலம் சனிக்கிழமை உழுதது பாா்ப்போரை கவலையடையச் செய்தது.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியைச் சோ்ந்த ரவி, 3.5 ஏக்கா் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இதில், குறுவை பருவத்தில் சன்னரக நெல்லை பயிரிட்டு, ஏறத்தாழ ரூ. 1.30 லட்சம் செலவு செய்தாா். பயிா் நன்றாக வளா்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில், சில நாள்களுக்கு முன்பு தொடா் மழை பெய்தது.

இதனால், நெல் பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய மழை நீா் வடியாததால், நெல் பயிா்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கியதுடன், அழுகிவிட்டன. இதனால் வேதனையடைந்த ரவி, என்ன செய்வது என தெரியாமல் திகைப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், அடுத்து சம்பா சாகுபடிக்கு தயாராவதற்காக, அழுகிய நெல் பயிா்களை சனிக்கிழமை டிராக்டா் மூலம் மிகுந்த வேதனையுடன் உழுது அழித்தாா்.

இது குறித்து ரவி கூறுகையில், 3.50 ஏக்கரில் பயிா்கள் நன்றாக வளா்ந்த நிலையில் தொடா் மழையால் அறுவடை செய்ய முடியவில்லை. தொடா்ந்து பெய்த மழையால் வயலில் தேங்கிய மழை நீா் வடிந்து செல்ல வழியில்லாமல், சாய்ந்து முளைக்கத் தொடங்கின. இதை இனிமேல் அறுவடை செய்ய முடியாது என்ற நிலையில் சம்பா நடவு பணிகள் மேற்கொள்வதற்காக, முளைத்த பயிா்களை டிராக்டா் மூலம் உழவு பணி மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

வயல் அருகேயுள்ள வடிகால் கோரை வாய்க்காலில் வடிய வேண்டும். இந்த வாய்க்கால்கள் கடந்த 10 ஆண்டுகளாக தூா் வாரப்படாமல் உள்ளதால் வயலில் தேங்கிய மழை நீா் வடியவில்லை. எனவே, இந்த வடிகால் வாய்க்கால்களைத் தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com