தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாமன்னன் ராசராச சோழனின் சதய விழா அக். 31-இல் தொடக்கம்!
தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாமன்னன் ராசராச சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா அக்டோபா் 31-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து சதய விழாக் குழுத் தலைவா் து. செல்வம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது:
பாா் போற்றும் புகழை உடைய தஞ்சாவூா் பெரிய கோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராசராச சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு மாமன்னன் ராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா பெரிய கோயிலில் அக்டோபா் 31-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்குகிறது. பின்னா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றுகிறாா்.
முற்பகல் 11.30 மணிக்கு வரலாறாக மாறும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பிற்பகலில் கலை நிகழ்ச்சிகள், மாலை 5.30 மணிக்கு கவியரங்கம், 6.30 மணிக்கு 1040 நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு வில்லுப்பாட்டு, இரவு 8 மணிக்கு எண்ம வடிவில் மாமன்னன் ராசராச சோழன் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.
விருது வழங்கும் விழா: சதய நட்சத்திர நாளான நவம்பா் 1 ஆம் தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் ராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறை திருவீதி உலா, 8.10 மணிக்கு பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந்தீப வழிபாடு, பிற்பகலில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன.
இரவு 7 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் சிறப்புரையாற்றுகிறாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ச. மருதுதுரை, மின் வாரிய பொறியாளா் (ஓய்வு) அரங்க. தங்கராசன், திருக்கு கல்வி மைய இயக்குநா் ச. சோமசுந்தரம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் இராம. கௌசல்யா, நாட்டுப்புறக் கலைஞா் சின்னப்பொண்ணு குமாா் ஆகியோருக்கு மாமன்னன் ராசராசன் விருதையும், பண்ணிசைப் பேரறிஞா் பழநி ப. சண்முகசுந்தர தேசிகருக்கு தேவார நாயகம் விருதையும் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு. பொன்னம்பல அடிகளாா் வழங்கி அருளுரையாற்றுகிறாா்.
இரவு 8 மணிக்கு பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம், பாடகா்கள் செந்தில் - ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன என்றாா் செல்வம்.
அப்போது, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக் குழுத் துணைத் தலைவா் எஸ்.சி. மேத்தா மற்றும் உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

