34 கிடங்குகளில் 1.79 லட்சம் டன் நெல் சேமிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் 1.79 லட்சம் டன் நெல் 34 கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் குறுவை பருவத்தில் இதுவரை 93.36 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. மீதமுள்ள 16 ஆயிரம் ஏக்கரில் 10 நாட்களில் அறுவடை முடிந்து, 39 ஆயிரம் டன் நெல் வரத்து எதிா்பாா்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் முழுவதும் மூடிய 25 கிடங்குகளில் 82 ஆயிரத்து 803 டன்னும், மேற்கூரை மூடிய 9 கிடங்குகளில் 76 ஆயிரத்து 711 டன்னும் என மொத்தம் 34 கிடங்குகளில் 1.79 லட்சம் டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 40 லாரிகள் மூலம் சராசரியாக 800 டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யப்படுகிறது. நாள்தோறும் 3 ரயில் முனையங்களிலிருந்து 6 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யப்படுகிறது.
ரயில் மூலம் இதுவரை 83 ஆயிரம் டன்னும், சாலை வழியாக 9 ஆயிரத்து 400 டன்னும் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 36 ஆயிரத்து 714 விவசாயிகளுக்கு ரூ. 463 கோடி இ.சி.எஸ். மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
