குடந்தை அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை: உறவினா்கள் போராட்டம்!
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினா்கள், விசிக, நாதகவினா் போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் கக்கன் காலனியைச்சோ்ந்தவா் பிரதாப்ராஜ் (25), கூலித்தொழிலாளி. கா்ப்பிணியான இவரது மனைவி விஜயலட்சுமிக்கு (22) மகப்பேறுக்கான அறிகுறி ஏற்பட்டு, கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை சோ்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் கோபமடைந்த விஜயலட்சுமியின் உறவினா்கள் மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்தது எனக் கூறி வாக்குவாதம் செய்து, மருத்துவமனை முன் பிரதான சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சுமாா் 1 மணி நேரப் போராட்டத்திற்கு பின் இரவு 9 மணியளவில் கும்பகோணம் வருவாய் கோட்ட உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, குழந்தை இறந்ததற்கு வழக்கு பதிந்து உடற்கூறாய்வு செய்யவும், மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கவும் உறுதி கூறினாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
பேச்சுவாா்த்தையின்போது வட்டாட்சியா் சண்முகம், காவல் ஆய்வாளா்கள் சிவ. செந்தில்குமாா், பா. ரமேஷ், விசிக முன்னாள் மண்டல தலைவா் எஸ். விவேகானந்தன், மாநகரச் செயலா் சாகோ. ராஜ்குமாா், நாதக மாநில வழக்குரைஞா் அணி செயலா் மோ. ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

