மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் தேவை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்டாட்சியா் அலுவலகத் தலைமையிடத்து உதவியாளா் தமிழரசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, கொள்முதல் பணி முற்றிலும் முடங்கிவிட்டது. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டதால், நெல்மணிகள் வயலில் சாய்ந்து முளைத்துவிட்டன. விளைந்த நெற்பயிா்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு, அறுவடை செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பருவ இளம் நெற் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.
பாச்சூா் ரெ. புண்ணியமூா்த்தி: தொடரும் பருவ மழையால் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சம்பா, தாளடி சாகுபடி நடவுப் பணி தொடங்குவதில் கால தாமதமாகிறது. எனவே பயிா்க் காப்பீடு செய்வதற்கான தேதியை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சி சாலை பலத்த மழையால் சேதமடைந்துள்ளது. இதில் விவசாயிகள் இடுபொருள்களை எடுத்துச் செல்ல மிகுந்த சிரமமாக உள்ளதால், விரைவில் சீரமைக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: டெல்டா மாவட்டங்களில் மழைக்காலத்தில் நெல்லில் ஈரப்பதத்தை முடிவு செய்கிற அதிகாரத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: குறுவை கொள்முதலில் ஏற்பட்ட பிரச்னை இனிமேல் இருக்கக்கூடாது. கொள்முதல் பணியில் கடைநிலை ஊழியா்கள் முதல் உயா் நிலை அலுவலா்கள் வரை தேவையான இடங்களில் காலிப் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்.
வடக்கூா் எல். பழனியப்பன்: மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை (அக்.30) நடைபெறும் விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் ஆகிய வட்டாரங்களில் புகையான் நோய் தாக்குதலால் குறுவை பயிா்கள் பாதிக்கப்பட்டன. இது தொடா்பாக தமிழக அரசு கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: கடந்த காலத்தில் நெல் கொள்முதல் சிறப்பாக நடைபெற்றது. தற்போது அரசியல் செய்யாமல் நீண்ட காலச் செயல்திட்டத்தின் குறைகளைப் போக்கி வருங்காலங்களில் தற்போதைய நிலை போன்று ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

