கூடுதல் பேருந்துசேவை கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
திருவோணம் அருகே வெட்டிக்காட்டில் பேருந்து வசதி இல்லாததால், தாமதமாக கல்லுாரிக்கு சென்றால், ஆப்சென்ட் போடுவதால், கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி புதன்கிழமை மாணவிகள் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாட்டுக்கு கந்தா்வக்கோட்டையில் இருந்து அரசு நகரப் பேருந்துகள் காலை 7. 30, 8. 30 மணிக்கு என இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட மாணவிகள் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் புதன்கிழமை காலை கறம்பக்குடியில் இருந்து ஒரத்தநாடுக்கு வந்த அரசு நகரப் பேருந்தை (36) வெட்டிகாட்டில் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவிகளுக்கு ஆதரவாக, அந்தப் பேருந்தில் வந்த கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, ஒரத்தநாடு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலா்கள், மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், காலை மற்றும் மாலை கூடுதல் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனா். பிறகு, ஒரத்தநாட்டில் இருந்து ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
