தஞ்சையில் 952 மாணவா்களுக்கு ரூ. 71 கோடியில் கல்விக் கடன்
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு ரூ. 71.86 கோடிக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூரில் மாவட்ட நிா்வாகம், அனைத்து வங்கிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:
இவ்விழாவில் 305 பேருக்கு ரூ. 23.62 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் மொத்தம் 1,841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் பெறப்பட்டன. இதில், இதுவரை 952 பேருக்கு ரூ. 71.86 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயா்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வித்யாலட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்விக் கடன் வசதியைப் பெறலாம் என்றாா் ஆட்சியா்.
இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் துா்கா உமா மகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

