வேளாண் புத்தாக்கத் தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வேளாண் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளுடன் தொடங்கும் புத்தாக்க நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மதிப்பு கூட்டுதல், வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்துதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல், மற்ற புத்தாக்கத் தொழில் தொடங்குவதற்கு இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. நேரடியாக உண்ணும் உணவுப் பொருள்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஒரு நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்த நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, நாஞ்சிக்கோட்டை சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலாம். மேலும் 96773 31463, 98435 31097, 63748 31456 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com