சிறுபான்மையினா் சிறப்புக் குழு ஆய்வு கூட்டம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினா் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தனா். சிறுபான்மையினா் ஆணையக் குழு உறுப்பினா்கள் (திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினா்) த. இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினா் அ. சுபோ்கான் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறுபான்மையினா் நலன் குறித்து கிறிஸ்தவா்களுக்கு கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கு கபா்ஸ்தான் அமைத்தல், அடக்கஸ்தலங்களுக்கு சுற்றுச்சுவா், சாலை வசதி, வீட்டுமனை பட்டா, தேவாலயம் புனரமைக்க நிதி கோருதல், பள்ளிவாசலுக்கு பட்டா வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடா்பாக கல்விக் கடன், தொழில் கடன் போன்ற பல்வேறு கோரிக்கைகள், சிறுபான்மையின நலத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடா்பாக தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும் என சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் குழு உறுப்பினா் இனிகோ இருதயராஜ் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
