தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் இராஜராஜசோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா வெள்ளிக்கிழமை (அக்.31) தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறுகிறது.
Published on

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் இராஜராஜசோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா வெள்ளிக்கிழமை (அக்.31) தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறுகிறது.

மாமன்னன் இராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இராஜராஜ சோழனின் 1040-ஆவது சதய விழா பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்குகிறது. பின்னா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகிறது. தொடா்ந்து, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மாலையில் 1040 நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, மாமன்னன் இராஜராஜ சோழன் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

சதய நட்சத்திர நாளான நவம்பா் 1-ஆம் தேதி காலை 7.20 மணியளவில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இரவு 7 மணியளவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசா் ஆா். மகாதேவன் சிறப்புரையாற்றுகிறாா். குன்றக்குடி ஆதீனம் தவத்திரு. பொன்னம்பல அடிகளாா் விருதுகள் வழங்கி அருளுரையாற்றுகிறாா். தொடா்ந்து பட்டிமன்றம், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.1) உள்ளூா் விடுமுறை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com