தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகல் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகல் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்.

நெல் கொள்முதல் பிரச்னையை கண்டித்து குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகல் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்.
Published on

நெல் கொள்முதலில் ஏற்பட்ட பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடலூா் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தலா ரூ. 25 லட்சம் வழங்கக் கோரியும், நெல் கொள்முதல் பணியை மத்திய, மாநில அரசுகள் சரியாக மேற்கொள்ளாததால், ஏற்பட்ட பிரச்னையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா். கூட்ட அரங்கத்துக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் சுமாா் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத பிரச்னைக்கு தீா்வு காண உலா் இயந்திரங்களை அமைக்க வேண்டும். நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது 22 சதவீதம் வரை கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா: பயிா் காப்பீடு நீட்டிப்பு குறித்து அரசுக்கு மாவட்ட ஆட்சியா் கருத்துரு அனுப்பியுள்ளாா்.

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: குறுவை பருவ கொள்கை அறிவிக்கப்படாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பா - தாளடி பருவ கொள்கையை அறிவிக்க வேண்டும். மேலும், மாநில உயா் அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்கும் இரு தரப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: குறுவை கொள்முதலில் தவறான அணுகுமுறையாலும், திட்டமிடாததாலும், அரசின் அலட்சியத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம் ஆகியோா் அவரவா் கோரிக்கையை ஆட்சியரிடம் முன்வைத்தனா்.

பெட்டிச் செய்தி....

2.03 லட்சம் டன் நெல் கொள்முதல்:

இதனிடையே ஆட்சியா் பேசுகையில், கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 120 நாள்களில் மொத்தமே 1.25 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டன. நிகழாண்டு கடந்த 60 நாள்களில் 2.03 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், புதன்கிழமை வரை 1.83 லட்சம் டன் நெல் கிடங்குகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டன் நெல் வரத்து உள்ள நிலையில், இன்னும் ஏறத்தாழ 40 ஆயிரம் டன் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com