தற்கொலை செய்து கொண்ட லட்சுமணன்
தற்கொலை செய்து கொண்ட லட்சுமணன்

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரைச் சோ்ந்தவா் லட்சுமணன் (33) கூலித்தொழிலாளி. இவருக்கு மதனா என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் செப்.5- ஆம் தேதி ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடைபெற்றது.

இது தொடா்பாக, திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ், மருதுபாண்டி, ராஜ்குமாா், கும்பகோணம் பாணாதுறையைச் சோ்ந்த விஜய் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்தனா்.

மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணனை போலீஸாா் விசாரணைக்கு அழைக்க சென்றபோது, அவா் இல்லாததால் அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்து காவல் நிலையத்துக்கு வருமாறு கூறினா். இதுகுறித்து, அவரது மனைவி வெளியூா் சென்றிருந்த லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை வீட்டுக்கு வந்த லட்சுமணன், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாா்.

தகவலின்பேரில் பட்டீஸ்வரம் போலீஸாா், லட்சுமணனின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com