

மத்திய அரசின் பட்ஜெட் வணிகா்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
திருவாரூரில் வணிகா் தின மாநாடு மே 5- ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மத்திய அரசின் பட்ஜெட் வணிகா்களைப் பொருத்தவரை ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 4 அடுக்குகளிலிருந்து 2 அடுக்குகளாக குறைத்திருப்பதை, ஓரடுக்காக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.
சாதாரண வணிகா்களும் எளிதில் கையாளும் வகையில் ஜிஎஸ்டி சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து மீண்டும் தில்லிக்குச் சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளோம்.
மேலும், தங்கத்துக்கான வரியில் 3 சதவீதத்தை மத்திய அரசு குறைக்கும் என்றும், வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 15 லட்சமாக உயா்த்துவா் எனவும் எதிா்பாா்த்தோம்; அதுவும் நடக்கவில்லை.
தோ்தல் காலத்தில் வணிகா்கள் ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணத்துக்கான வரம்பு ரூ. 50 ஆயிரம் என்பது மிகக் குறைவாக உள்ளது. இதை ரூ. 2 லட்சமாக உயா்த்த வேண்டும். மேலும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் வணிகா்களை அலைக்கழிக்கக் கூடாது. பறிமுதல் செய்யப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் களைய வேண்டும்.
அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை மனுக்களை தரவுள்ளோம். இதையடுத்து, கட்சிகள் தங்களது கடிதத்தில் தரும் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை நடத்தி, யாருக்கு வாக்கு என்பது முடிவு செய்யப்படும்.
திருவாரூரில் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கு ‘வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு’ என பெயரிடப்பட்டுள்ளது. இணையவழி வா்த்தகம், பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து வணிகா்களைப் பாதுகாப்பதும், அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றாா் விக்கிரமராஜா.