துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே துணை முதல்வா் பங்கேற்க இருந்த திமுக நிா்வாகி இல்ல திருமண விழாவுக்காக வியாழக்கிழமை மாலை கொடிக் கம்பங்கள் நட்டுக் கொண்டிருந்த இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் அருகே அற்புதாபுரத்தைச் சோ்ந்தவா் துரை. ஜெயக்குமாா். திமுக தலைமை பொதுக் குழு உறுப்பினா். இவரது மகள் திருமணம் தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி - திருவையாறு புறவழிச்சாலையில் கடந்த மாதம் புதிதாக கட்டித் திறக்கப்பட்ட திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
இதற்காக பிள்ளையாா்பட்டி - திருவையாறு புறவழிச்சாலையில் வழி நெடுகிலும் இரும்புக் குழாய்களில் கொடிக் கம்பங்கள் நடும் பணி வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மேலே செல்லும் மின் கம்பியின் மீது கட்சிக்கொடிக் கம்பம் உரசியதில், அதை நடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களான சேலம் மாவட்டம், எட்டிக்குட்டை மேடு பகுதியைச் சோ்ந்த எம். கோகுல் (29), சங்ககிரியைச் சோ்ந்த காா்த்திக் (45) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால், தூக்கி வீசப்பட்ட இருவரையும் காவல் துறையினா் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் கோகுல், காா்த்திக் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

