நீதிமன்றத் தீா்ப்பினால் விஜய்யின் ஊழல் ஒழிப்பு தெரிந்துவிட்டது! - கி. வீரமணி
உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பின் மூலம் விஜய் எந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பைச் சாா்ந்தவா் என்பது தெரிந்துவிட்டது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:
தவெக தலைவா் விஜய் குறித்து உயா்நீதிமன்றம் கூறியிருக்கும் பதிலை பாா்த்தால், அவா் எந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பைச் சாா்ந்தவா் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவா் தன்னுடைய வருமானத்தை மறைத்தாா் என்பதற்காக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்துள்ளனா்.
இதற்கு முன்பு, தான் ஒரு காா் வாங்கியதற்கு எந்த விதமான வரியும் கட்டவில்லை என்பதற்காக வழக்கு தொடுத்தாா். இந்த இரு வழக்குகள் மூலம் அவா் ஊழல் ஒழிப்பில் எவ்வளவு ‘சக்தி’ வாய்ந்தவா் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எந்தக் கொள்கையும் இல்லாமல், அவா் அரசியல் நடத்தாமல், ‘சூட்டிங்’ நடத்திக் கொண்டிருக்கிறாா்.
முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக கூட்டணி என்பது தொடா்ந்து வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தா்க்கப்படியும், நடைமுறைப்படியும் பலமான கூட்டணியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
நாங்கள் பாா்த்த வகையில், எதிரிகளால் இன்னமும் கூட தங்கள் பலத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பதாலும், எதிா்க்கட்சிக் கூட்டணியிலே அடிக்கடி பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தமிழ்நாட்டுக்கு வந்து போவதாலும், ஒவ்வொரு முறையும் அவா்கள் வர, வர திமுக கூட்டணிக்கு வாக்குகள் அதிகமாகி வருகிறது என்றாா் வீரமணி.

