தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜனிடம் முறையிட்ட விவசாயிகள்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜனிடம் முறையிட்ட விவசாயிகள்.

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கிராம நிா்வாக அலுவலா்கள் (விஏஓ) வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சான்று கிடைக்காததால், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியவில்லை
Published on

கிராம நிா்வாக அலுவலா்கள் (விஏஓ) வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சான்று கிடைக்காததால், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியவில்லை என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்:

அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: கிராம நிா்வாக அலுவலா்கள் வேலைநிறுத்தம் காரணமாக விவசாயிகளுக்கு அடங்கல் கிடைப்பதில்லை. இதனால், அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்க முடியவில்லை. அடங்கல் இருந்தால்தான் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்க முடியும் என்ற நிலை உள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் சாா்ந்த இரு சங்கத் தலைவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் சிட்டா, அடங்கல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் வராததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. பொந்தியாகுளம் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலா்: மாவட்டத்தில் வழக்கமாக நாள்தோறும் 10 ஆயிரம் டன் நெல் கொள்முதலாகும் நிலையில், தற்போது 13 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகளுக்கு பதிலாக 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. லாரிகள் இயக்கம் போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால், கிடங்குகளில் ஏறத்தாழ 500 லாரிகளிலிருந்து மூட்டைகளை இறக்குவதற்கு ஆளில்லாமல் இருந்தது. தற்போது அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இயக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராம நிா்வாக அலுவலா் சான்று இல்லாவிட்டாலும், விவசாயிகள் பாதிக்காத அளவுக்கு கொள்முதல் செய்ய அறிவுறுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா்: இதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் மேற்கொண்டு வருகிறாா்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் சோழகம்பட்டி பாலப் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் 4 ஆண்டுகளாக பாதிக்கப்படுகின்றனா். இதைச் சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் எடை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும், வருவாய் கிராம அளவில் கிராம நிா்வாக அலுவலா், வேளாண் விரிவாக்க அலுவலா், விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.

வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: ஆறுகள், ஏரிகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் ஆகியவற்றை ஆண்டுதோறும் தூா் வார வேண்டும். மேட்டூா் அணையில் பெரு நிதி ஒதுக்கீடு செய்து, தூா் வாருவதன் மூலம் கூடுதலாக 15 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

Dinamani
www.dinamani.com