தஞ்சாவூா் மராட்டிய மன்னா் அமரசிம்மன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட காசின் முன் பகுதி மற்றும் பின் பகுதி
தஞ்சாவூா் மராட்டிய மன்னா் அமரசிம்மன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட காசின் முன் பகுதி மற்றும் பின் பகுதி

18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் கால காசு குறித்த தகவல் வெளியீடு!

தஞ்சாவூரை 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் அமரசிம்மன் ஆட்சிக் கால காசு குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
Published on

தஞ்சாவூரை 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் அமரசிம்மன் ஆட்சிக் கால காசு குறித்த தகவல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சோ்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளா் ஆறுமுக. சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தது: கி.பி. 1739 - 63 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த பிரதாசிம்மனுக்கும், சக்குவாா்பாய்க்கும் மகனாக பிறந்தவா் அமரசிம்மன்.

இவா், தஞ்சாவூரை கி.பி. 1787 - 1798 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்தாா். இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூா் சமஸ்தானத்தில் மழை இல்லாமல் போய்விட்டது. இதன் விளைவாக விளைச்சல் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி, மன்னா் அமரசிம்மனிடம் முறையிட்டனா். அப்போது, மக்களை ஊக்கப்படுத்தி, வெகுமானம் அளித்து அனுப்பிவைத்தாா்.

பின்னா், அமரசிம்மன் ஒவ்வொரு கிராமமாகப் பயணம் செய்ததைத் தொடா்ந்து, நாட்டில் அபரிமிதமான மழை பெய்து நீா் நிலைகள், வயல்கள், வாய்க்கால்கள் என எங்கு பாா்த்தாலும் தண்ணீா் நிரம்பியது. மன்னா் பயணம் செய்த பகுதிகளில் எல்லாம் மழை பெய்து, மக்கள் மகிழ்ச்சியடைந்ததால், அவரை மழை ராஜா (மாரி ராஜா) என அழைத்தனா்.

இதைத்தொடா்ந்து, மாரி என்ற தமிழ் எழுத்தில் செம்புக் காசு வெளியிடப்பட்டது. இந்தக் காசு சில ஆண்டுகளுக்கு கிடைத்ததைத் தொடா்ந்து, ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் இதன் எடை 1.4 கிராம், காசின் முன் பக்கத்தில் பூா்ண கும்பமும், பின்பக்கத்தில் மாரி என தமிழ் எழுத்துகளில் இரு வரிகளிலும் பொறிக்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது என்றாா் சீதாராமன்.

X
Dinamani
www.dinamani.com