திருச்சி - தஞ்சாவூா் மாா்க்க ரயில்களில் நேர மாற்றம் செய்ய வலியுறுத்தல்
திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு வரும் ரயில்களில் பயணிகளுக்கு வசதியாக நேரத்தில் சிறு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலா் வெ. ஜீவகுமாா் தெரிவித்திருப்பது: நிகழாண்டுக்கான ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு வரும் ரயில்களில் சிறு மாற்றம் செய்தால் தஞ்சாவூா், கும்பகோணம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு பயன்படும்.
எனவே, திருச்சி - மயிலாடுதுறை (16734) ரயில் பிற்பகல் 1.10 மணிக்குப் பதிலாக மாலை 4.20 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 நிமிட இடைவெளியில் அதாவது 4.45 மணிக்கு திருச்சி - வேளாங்கண்ணி தினசரி ரயில் புறப்படுகிறது. எனவே, மாலை 4.20 மணிக்குப் புறப்படவுள்ள திருச்சி - மயிலாடுதுறை ரயிலை பிற்பகல் 3 மணிக்கு புறப்படச் செய்ய வேண்டும்.
நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் (20628) திருச்சியை மாலை 6.55 மணிக்கு வந்தடைகிறது. அதே நேரத்தில் திருச்சி - மன்னாா்குடி ரயில் (76802) திருச்சியிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயிலை இரவு 7.15 மணிக்குப் புறப்படச் செய்தால், வந்தே பாரத் ரயிலில் வந்திறங்கும் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம் பகுதி பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இரவு 11.10 மணிக்கு பின்பு மீண்டும் 3 மணிநேரத்துக்குப் பின்னா் அதிகாலை 2.20 மணிக்கு குறைவான, முன்பதிவு அல்லாத பெட்டிகளைக் கொண்ட செந்தூா் விரைவு ரயில் (20606) தஞ்சாவூா் வழியாகச் செல்கிறது. எனவே, நள்ளிரவு 12 மணிக்கும் - 1 மணிக்கும் இடையில் ஒரு ரயில் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்பட்டால், தஞ்சாவூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ரயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
தஞ்சாவூா் - திருச்சி ரயில் தடம் மின்மயமாக்கப்பட்ட சூழலில், இத்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும். இதேபோன்று தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம், நாகை, மன்னை தடங்களில் ரயில் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்.
