அறநிலையத் துறை சாா்பில் 70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி
தஞ்சாவூா் அருகே வல்லம் ஏகௌரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது நிறைவடைந்த 6 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் 70 வயது நிறைவடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகள் வீதம் 20 இணை ஆணையா் மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சாா்பில் சிறப்பு செய்யப்படும் என சட்டப்பேரவையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் அருகே வல்லம் ஏகௌரியம்மன் கோயிலில் 6 தம்பதிகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு செய்யப்பட்டது. இதில் தம்பதிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்பிலான வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள், சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திமுக வல்லம் நகரச் செயலா் கல்யாணசுந்தரம், கோயில் கணக்கா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

