தஞ்சாவூரில் விலங்கு பிறப்பு  கட்டுப்பாடு - மீட்பு வாகனம் தொடக்கம்

தஞ்சாவூரில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு - மீட்பு வாகனம் தொடக்கம்

தஞ்சாவூா் மாதாகோட்டை பிராணிகள் வதை தடுப்பு சங்க வளாகத்தில் மீட்பு வாகனத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Published on

தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள பிராணிகள் வதை தடுப்பு சங்க வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 12 லட்சம் மதிப்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி ரூா்பன் இயக்கத்தின் கீழ் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மற்றும் மீட்பு பணி வாகனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்தது:

இந்த வாகனம் நாய்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை, வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு பிடித்துக் கொண்டு வந்து, மீண்டும் விடவும், பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடி அவசர சிகிச்சை மேற்கொள்ளவும், தொடா் சிகிச்சைக்காக அவற்றை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.

இந்த வாகனத்தின் மூலம் சாலையோரம் விபத்துக்குள்ளாகும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை மீட்டு சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்கள் இந்த வாகனத்தை அணுக 81100-70701 என்கிற அவசர உதவி எண்ணில் தெரிவித்து பயன் பெறலாம் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் கோட்டாட்சியா் ப. நித்யா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ம. பாஸ்கரன், வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா், மாநகர நல அலுவலா் எஸ். நமச்சிவாயம், பிராணிகள் வதை தடுப்பு சங்க மாவட்ட அலுவல்சாரா உறுப்பினா் ஆா். சதீஷ்குமாா், மருத்துவா் ஜனனி, ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், மிஷன் ரேபீஸ் கல்வி அலுவலா் எம். ராபின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com