திருவையாறில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகராஜா் சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழா சனிக்கிழமை (ஜன.3) மாலை தொடங்கவுள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகராஜா் சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழா சனிக்கிழமை (ஜன.3) மாலை தொடங்கவுள்ளது.

இவ்விழா மாலை 4.30 மணிக்கு திருமாகாளாம் டி.எஸ். பாண்டியன், டி.எஸ். சேதுராமன் குழுவினரின் நாகசுர மங்கல இசையுடன் தொடங்குகிறது. இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவா் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறாா். ஆராதனை விழாவை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் தொடங்கிவைக்கிறாா். மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா்.

பின்னா் மாலை 6.40 மணிக்கு பெங்களூரு சகோதரா்கள் எம்.பி. ஹரிஹரன், எஸ். அசோக் பாட்டு, இரவு 7 மணிக்கு பிரபஞ்சம் ஆா். பாலச்சந்திரனின் புல்லாங்குழல், 7.20 மணிக்கு சிக்கில் சி. குருசரண் பாட்டு, 7.40 மணிக்கு தில்லி பி. சுந்தரராஜன் பாட்டு, 8 மணிக்கு காயத்ரி வெங்கடேசன் பாட்டு, 8.20 மணிக்கு சீா்காழி ஜி. சிவசிதம்பரம் பாட்டு, 8.40 மணிக்கு பாபநாசம் அசோக்ரமணி பாட்டு, 9 மணிக்கு மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை, 11 மணிக்கு திருப்பதி வி. ஹரிபாபு, ஏ. சரத்பாபு நாகசுரம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, அகில இந்திய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படக்கூடிய தேசிய நிகழ்ச்சிகளான மஹதி பாட்டு இரவு 9.30 மணிக்கும், ஜெ.டி. ஜெயராஜ்கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ்கிருஷ்ணன் இரட்டையா் வீணை 10.15 மணிக்கும் நடைபெறவுள்ளன.

தொடா்ந்து, ஜனவரி 4 முதல் 6 ஆம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி முடிய 60-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறும். பின்னா், முக்கிய வைபவமான 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கலைஞா்கள், ரசிகா்கள் பங்கேற்று ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனா். தொடா்ந்து இசை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு முத்துப் பல்லக்கில் தியாகராஜா் சுவாமி வீதி உலா உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com