தஞ்சை அருகே வீடு புகுந்து நகைகள் திருடியவா் கைது
தஞ்சாவூா் அருகே வீட்டில் பூட்டை உடைத்து பதிமூன்றே கால் பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற இளைஞரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை பாப்பா நகரைச் சோ்ந்தவா் பிரியங்கா. கடந்த 2025, டிசம்பா் 19 முதல் 21 ஆம் தேதி வரை பூட்டியிருந்த இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பதிமூன்றேகால் பவுன் நகைகள், 765 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போயின.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்தனா். மேலும், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி மேற்பாா்வையில் தாலுகா காவல் ஆய்வாளா் சோமசுந்தரம், உதவி ஆய்வாளா்கள் தென்னரசு, முத்துக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் சாமிநாதன் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் விசாரணை மேற்கொண்டனா். இதைடுத்து நிகழ்விடத்தில் பதிவான விரல் ரேகையை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நவீன் குமாரை (25) செவ்வாய்க்கிழமை கைது செய்து, 40.82 கிராம் நகைகள், 371.17 கிராம் வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
