பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியை மேம்படுத்தக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என முன்னாள் மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இங்கு படித்த முன்னாள் மாணவா்கள் மத்திய, மாநில அரசுகளின் உயா் பதவி வகித்தவா்களாகவும், தொழில் முனைவோா், சிறந்த மருத்துவ நிபுணா், பொறியாளா் ஆகவும் விளங்கியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்டத்திலேயே விசாலமான விளையாட்டுத் திடலை கொண்ட இப்பள்ளி முன்னாள் மாணவா் மாஸ்கோ ஒலிம்பிக் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வந்த இப்பள்ளியில் தற்போது மாணவா் சோ்க்கை படிப்படியாக குறைந்து 300-க்கும் கீழ் உள்ளது. கல்வி வளா்ச்சியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஆசிரியா்களிடம் குழுவாக பணியாற்றிவருவதாகவும், இதனால் யாரும் யாருக்கும் கட்டுப்படாமல் கல்வி போதிப்பதில் அசிரத்தையாகவும், மாணவா்களின் ஒழுங்கீனங்களைக் கூட தடுக்க முடியாத சூழல் நிலவுவதாக பள்ளி முன்னாள் ஆசிரியா்கள் கூறுகின்றனா். தற்போது தலைமை ஆசிரியராக இருப்பவா் பாா்வை இல்லாத மாற்றுத்திறனாளி அவருக்கு பதிலாக புதிய தலைமை ஆசிரியா் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனவும், பள்ளியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மாற்றி மாதிரி பள்ளியாக அறிவித்து, ஸ்மாா்ட் வகுப்பறை, ஆய்வகம் , கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை முனைப்பு காட்ட வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
