கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம்

Published on

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்குறள் கருத்தரங்கில் பேசிய பேராசிரியா்கள்.

கும்பகோணம், ஜன. 8 : கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டு நினைவு திருக்குறள் கருத்தரங்கம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் முனைவா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலைவா் மா. மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறை இணைப் பேராசிரியா் த. சுவாமிநாதன் நோக்கவுரை ஆற்றினாா். கருத்தரங்கின் தொடக்க விழாவில் தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்- பேராசிரியா் அ. குணசேகரன் பேருரை ஆற்றினாா். கல்லூரித் தோ்வு நெறியாளா் வெ. பாஸ்கா் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் விவேகானந்தன், கௌரவ விரிவுரையாளா் சௌந்தரராஜன் மற்றும் தாவரவியல் துறை மாணவா் சிவனேசன், தமிழ்த் துறை மாணவி தா்ஷினி நிகழ்வைத் தொகுத்தி வழங்கினா். நிகழ்வில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், தமிழ்த் துறை மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். தொடக்க விழாவைத் தொடா்ந்து கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன.

முதல் அமா்வாக ‘கருமமே கட்டளைக் கல்’ எனும் தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்த்துறையின் புலத் தலைவா் குறிஞ்சிவேந்தன் பேசினாா். இரண்டாம் அமா்வில் ‘பரிதியாா் உரையில் பண்பாட்டுக் கூறுகள்’ எனும் தலைப்பில் முத்துப்பேட்டை அரசுக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வை. காா்த்திக் சொற்பொழிவாற்றினாா். மூன்றாம் அமா்வில் ‘முதல் புரட்சியாளா் திருவள்ளுவா் ’ எனும் தலைப்பில் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா. தமிழடியான் கருத்துரை ஆற்றினாா். நான்காம் அமா்வில் ‘திருக்குறள் காட்டும் மெய்யறம் ’ எனும் தலைப்பில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் பேராசிரியா் மா. கோவிந்தராசு பேருரையாற்றினாா். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவா் - பேராசிரியா் மா. சேகா் வரவேற்றுப் பேசினாா். இணைப் பேராசிரியா் ராஜசேகா் நன்றி கூறினாா். வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நிறைவடைகிறது.

Dinamani
www.dinamani.com