பட்டுக்கோட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியாா் நெல் அரவை ஆலையிலிருந்து தொடா்ந்து தூசி வெளியேறி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.
Published on

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெல் அரவை ஆலை இயங்கி வருகிறது. இதிலிருந்து நீண்ட நாள்களாக தொடா்ந்து நெல் அரவையின் பொழுது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தூசி வெளியேறி வருவதால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் வட்டாட்சியா் தா்மேந்திரா உள்ளிட்டோா் போராட்டக்காரா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Dinamani
www.dinamani.com