நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்
நூறு நாள் வேலை திட்டத்தைச் சீா்குலைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நூறு நாள் வேலை சட்டத்தைச் சிதைத்தும், கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு எனக் கூறிய மகாத்மா காந்தியின் பெயரை அகற்றியும், கிராம சபை மக்களின் அதிகாரத்தைப் பறித்து தில்லியில் அதிகாரத்தைக் குவித்தும், உடலுழைப்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும், வேலை பெறும் உரிமைச் சட்டத்தைச் சேவை திட்டமாக மாற்றிய பாஜக அரசைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் வாழ்த்துரையாற்றினாா்.
பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் ஜான்சன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் ஜி. லட்சுமி நாராயணன், செயலா் முருகானந்தம், பொதுச் செயலா்கள் கண்ணன், செந்தில் சிவகுமாா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது யூனுஸ், சேவாதளம் திருஞானம், மாமன்ற உறுப்பினா் ஹ. ஹைஜாக்கனி, கோட்டத் தலைவா்கள் பிரபாகரன், மகேந்திரன், கோட்டச் செயலா் வடிவேலு, வா்த்தகப் பிரிவு தலைவா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதன் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா்.
போராட்டத்தை வழக்குரைஞா் பிரிவு தலைவா் பாபு தொடங்கி வைத்தாா். தெற்கு மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், பொதுச் செயலா் என். மோகன்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, சுரேஷ், அய்யப்பன், கபிலன், ஷேக்இப்ராகிம்ஷா, வெங்கடாஜலம் சிவா, ஊடகப் பிரிவு தலைவா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
