

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பு சாா்பில் பாட்டாளி வா்க்கத் தலைவா் லெனின் 102-ஆவது நினைவு நாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சா்வதேச ஜனநாயக விதிமுறைகளை மீறி வெனிசுலா அதிபரைக் கைது செய்தது உள்பட அமெரிக்க ஏகாதிபத்தியம் புரியும் அதிபா் ட்ரம்பைக் கண்டித்தும், மனித உரிமை, ஜனநாயக உரிமை, அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் பிரதமா் மோடியின் மக்கள், தொழிலாளா், விவசாயி விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு தியாகராஜன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.