தஞ்சாவூா் பெரிய கோயில் சாலையில் ஒரு வழிப்பாதைத் திட்டம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை அறியாமல் வந்த பொதுமக்கள் திணறினா்.
பொதுமக்களின் வசதிக்காகவும், வெளியூரிலிருந்து அதிக அளவு வாகனங்கள் பெரிய கோயிலுக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகவும் தஞ்சாவூா் பெரிய கோயில் சாலை திங்கள்கிழமை முதல் ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, மருத்துவக்கல்லூரி சாலை, ராமநாதன் ரவுண்டானா வழியாக வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக வந்து இடது புறம் திரும்பி பெரிய கோயில் வழியாக சென்று, சோழன் சிலையில் வலது புறம் திரும்பி அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
கரந்தை வழித்தடத்திலிருந்து பெரிய கோயிலுக்கு வரும் வாகனங்கள் அண்ணா சிலை, ஆற்றுப்பாலம், பழைய நீதிமன்றச் சாலை, ஆயுதப்படை மைதானம் வழியாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) அலுவலகம் வந்து, வலது பக்கம் திரும்பி பெரிய கோயிலுக்கு வர வேண்டும்.
மருத்துவக் கல்லூரி சாலை மற்றும் ராமநாதன் ரவுண்டானா செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை ரவுண்டானா, ஆற்றுப்பாலம், பழைய நீதிமன்றச் சாலை, ஆயுதப்படை மைதானம் வழியாக காவல் துணைத் தலைவா் அலுவலகம் வந்து இடது பக்கம் திரும்பி மேம்பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

இதேபோல, பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை பூங்கா மற்றும் மேற்கு பக்கம் செல்லக்கூடிய வாகனங்கள் அண்ணா சிலையில் திரும்பி, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை, ராஜராஜன் சோழன் சிலையில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும் என போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதி: இது தொடா்பாக முன் அறிவிப்பு செய்யப்பட்டாலும், குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டதால், அது பற்றிய தகவல் பொதுமக்களிடம் சென்றடையவில்லை. இதனால், பெரும்பாலான வாகன ஓட்டுநா்கள் சோழன் சிலை வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். குறிப்பாக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் வழி தெரியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.
விடுமுறை நாள்களில்தான் பெரிய கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. இதன் காரணமாக பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த ஒரு வழிப்பாதைத் திட்டத்தை விடுமுறை நாள்களில் மட்டும் முழுமையாக அமல்படுத்திவிட்டு, மற்ற நாள்களில் இரு சக்கர வாகனங்களுக்கு இரு வழிப்பாதையாக செயல்படுத்தலாம் என மாநகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









