தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில், மாணவ, மாணவிகள் உயா் கல்வி பயில பள்ளித் தலைமையாசிரியா்கள், உயா் கல்வி ஆசிரியா்களுக்கான வழிகாட்டி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, பின்னா் தெரிவித்தது:
இந்த முகாமில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி பயில எந்தெந்த துறையைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும், அதற்கான வழிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன. தொழிற் பயிற்சி, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்து பயில்வதற்கான ஆலோசனைகளை அந்தந்த துறைகளைச் சாா்ந்த பேராசிரியா்கள் வழங்கினா்.
அரசு கல்வி நிறுவனத்தைச் சாா்ந்த பேராசிரியா்கள் மற்றும் விரிவுரையாளா்கள் கலந்து கொண்டு தங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலுள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனா்.
10, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் உயா் கல்வி நிறுவனங்களில் நூறு சதவீதம் சேருவதற்கான முயற்சியாக இந்நிகழ்ச்சி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ. பேபி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் இ. மாதவன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










