தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் 592 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா, புகையிலை பொருள்கள் தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறுக்கு கடத்தி வரப்படுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவையாறு தேரடி சந்திப்பில் வியாழக்கிழமை காலை ஆந்திர மாநிலத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றி வந்த மினி வேனை திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு மேற்பாா்வையில், திருவையாறு காவல் ஆய்வாளா் மீனா, உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் உள்ளிட்டோா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் பல மூட்டைகளில் 592 கிலோ கொண்ட குட்கா பொருள்கள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினா், இதை மினி வேனில் கடத்தி வந்த திருவையாறு அருகே தில்லைஸ்தானம் கிழக்கு வீதியைத் சோ்ந்த நாகேந்திரன் மகன் விக்னேஷ் (26), புனல்வாசல் மந்தைக்கரை வீதியைச் சோ்ந்த பாலகுரு மகன் பாண்டியன் (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.







