திருச்சியில் ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் திருச்சியில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் புதன்கிழமை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக ஆளுநர் திருச்சியில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் புதன்கிழமை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தான் செல்லும் மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். 
மாநில அரசு அதிகாரத்தில் ஆளுநர் தலையீடு கூடாது என திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் அரசு அதிகாரிகளுடன் திருச்சியில் ஆய்வு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே ஜெயில் கார்னர் பகுதியில் சாலையோரம் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி ஆளுநரை திரும்பிச் செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் தெற்கு மாவட்ட செயலருமான கே.என். நேரு தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி ந. தியாகராஜன், மாநகரச் செயலர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செ. ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
ஆளுநர், பல்கலைக்கழகத்துக்கு செல்லும்போது அவருக்கு எதிராக கருப்புக்கொடியை காட்டி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பட்டம் நடந்து கொண்டிருந்தபோதே ஆளுநர் வாகனமும், உடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் அந்த இடத்தை கடந்து சென்றன.
பின்னர், செய்தியாளர்களிடம் கே.என். நேரு கூறியது: ஆளுநர் அதிகாரத்தை மட்டும் கவனித்துக் கொண்டு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடாமல் இருந்தால் இந்த போராட்டமே நடத்த மாட்டோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர், அமைச்சர்களை அவமரியாதை செய்யும் வகையில் ஆய்வு நடத்தி வருகிறார்.
முதல்வராக ஜெயலலிதா இருந்தால் ஆளுநர் ஆய்வு செய்திருப்பாரா என்பதை ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செய்யாததால் ஆளுநரை ஆய்வு செய்து மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஆளுநரை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com