காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 72.23 கி.மீ. ரயில் பாதையில் ஜூன் 30 ஆம் தேதி மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இப்பாதையில் மொத்தம் 35 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேட்டுக்கும் தலா 3 பேர் வீதம் 105 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் 5 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு மற்றவர்கள் பணியமர்த்தாத காரணத்தால் ரயில்களை இயக்குவதில் பாதுகாப்பு பிரச்னை எழுந்துள்ளது. இதில் , ரயில்வே இதுவரை இல்லாத புதிய நடைமுறை இந்த மார்க்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் இரு கேட் கீப்பர்களில் ஒருவர் என்ஜினுக்கு அடுத்தப் பெட்டியிலும், கடைசியாக கார்டு பெட்டிக்கு முன்புள்ள பெட்டியில் ஒருவரும் என இருவர் பயணிக்கின்றனர்.
ரயில்வே கேட் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் ரயில் சென்றதும் நிறுத்தப்பட்டு, முன்புள்ள பெட்டியில் இருப்பவர் இறங்கிச் சென்று கேட்டை மூடிவிட்டு ரயிலில் ஏறி விடுவார். ரயில் புறப்பட்டு கேட்டை கடந்ததும் மீண்டும் ரயில் நிறுத்தப்படும். பின்னர், கடைசிப் பெட்டிக்கு முந்தையப் பெட்டியில் உள்ள நபர் கேட்டை திறந்துவிட்டு ரயிலில் ஏறிவிடுவார். அதன் பிறகு ரயில் புறப்பட்டுச் செல்லும்.
இதேபோன்று 35 கேட்டுகளிலும் ரயில் நின்று... நின்று... செல்வதாலும், மேலும் ரயில் நிலையங்களிலும் நின்றுச் செல்வதாலும்தான் பயண நேரம் கூடுதலாகிறது.
பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி இடைப்பட்ட தூரத்தில், ஒட்டாங்காடு, பேராவூரணி, ஆயிங்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் ஆகிய 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
டிஜிட்டல் இந்தியா எனக் கூறிவரும் நிலையில் இதுபோல சுதந்திர இந்தியா காலத்துக்கு முன்புள்ள நடைமுறையை பின்பற்றுவது வேதனைக்குரியது என்கின்றனர் பயணிகள்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பயணிகள் வருகை குறைவு எனக் காரணம் காட்டி இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்துவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.