இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உயரமான மரக்கன்று நடும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் 12 அடி உயர மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியிருக்கிறது நெடுஞ்சாலைத் துறை.

Updated On :9 ஜூலை 2018, 2:48 am

திருச்சி மாவட்டத்தில் பசுமையான சூழலை உருவாக்கும் வகையில் 12 அடி உயர மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியிருக்கிறது நெடுஞ்சாலைத் துறை.
சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது அப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக மாற்று இடங்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் பல இடங்களில் இது பின்பற்றப்படுவதில்லை. இதனால், நெடுஞ்சாலைகளில் நிழலுக்குக் கூட ஒதுங்கமுடியாத நிலைதான் உள்ளது.
இந்நிலையில்,  திருச்சி மாநகர்ப் பகுதிகளிலும், புறநகரின் பல்வேறு பகுதிகளிலும்  மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில்  பசுமைச் சூழலை உருவாக்கும் வகையில் மரக் கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கம்  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. திருச்சி மாநகர் மட்டுமல்லாது  துறையூர், மணப்பாறை, லால்குடி, சமயபுரம், முசிறி பகுதிகளில் வேம்பு, புங்கை, பூவரசு, புளி, நெல்லி, கொய்யா போன்ற பல்வேறு வகை மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.  2 ஆண்டுகளில் மட்டும் 24,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.   இவற்றில் பெரும்பாலான மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன என்றாலும் உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை  ஆடு, மாடுகள் தின்று விடுவதும் நடக்கிறது. 
உயரமான மரக்கன்றுகள்
இந்த நிலையைத் தவிர்க்கும் வகையிலும்,  மரக்கன்று வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையிலும் 12 அடி உயரம் வரையிலான  மரக்கன்றுகளை வெளிப் பகுதியிலிருந்து வாங்கி, மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நடும்பணியை  தொடங்கியிருக்கிறது நெடுஞ்சாலைத் துறை.
இதன் தொடக்கமாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில், கரூர், கோவை மார்க்கத்தில் பேருந்துகள் செல்லும் பகுதியையொட்டியுள்ள கடைகளுக்கு அருகில் நன்கு உயர்ந்த மரக்கன்றுகளை நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு, பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாநகர், புறநகரில் 10,000  மரக்கன்றுகள் :   நிகழாண்டில் திருச்சி மாநகர், மாவட்டப் பகுதிகளில்  10,000 புதிய மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளோம்.  முதல் கட்டமாக தற்போது வாங்கப்பட்டுள்ள மரக்கன்றுகளில் அரசு,  பாதாம், வேம்பு, ஆல மரக்கன்றுகள் நன்கு உயர்ந்தவையாக உள்ளன. இவை திருச்சி மாநகர்ப் பகுதி  மாநில நெடுஞ்சாலையோரங்களில் நடப்படுகின்றன.
அடுத்து ஆடி மாதத்தில் காற்று அதிகம் வீசம் என்பதால், தற்போது நடப்படும் மரக்கன்றுகளுடன் சவுக்குமரக் கட்டையும் இணைத்துக் கட்டி வருகிறோம். உயரமான மரக்கன்று  விரைவாக வளர்ந்து, சில ஆண்டுகளில் மரங்களாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளில் 95 சதவிகிதத்துக்கும் மேல் நன்றாக வளர்ந்த நிலையில் , மீதமுள்ள கன்றுகள் வளராததற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது ஏற்பட்ட கிடைத்த தகவலின்பேரில் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.  மாவட்டம் முழுவதும் விரைவில் பசுமையான சூழல் வரும் என்கிறார் நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டப் பொறியாளர் ஆர். கிருஷ்ணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.