நமது நிருபர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கடினமானதாக அமைந்து, மதிப்பெண்ணும் குறைந்த நிலையில், மறு தேர்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், 27 வெளிநாடுகளிலும் உள்ள சுமார் 27,000 பள்ளிகளைச் சேர்ந்த 24.71 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஏப்.15) வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற்ற கணித பாடத் தேர்வு மிகவும் கடினமான வினாக்களுடன் அமைந்திருந்ததாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த பல மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டு கதறினர். அதைத் தொடர்ந்து மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற 12-ஆம் வகுப்பு கணித தேர்வும் கடினமானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
11-ஆம் வகுப்புக்கான நுழைவு வாயில் என்பதால் 10-ஆம் வகுப்புத் தேர்வு முக்கியத்துவம் பெறும் நிலையில், கணிதத் தேர்வில் நேரடி வினாக்களுக்குப் பதிலாக அறிவுத் திறனை சோதிக்கும் வகையிலான, அதிக நேரம் எடுக்கக் கூடியதும், சிந்தித்து பதிலளிக்கக் கூடிய தர்க்க ரீதியிலான வினாக்களும் அதிக அளவில் இடம்பெற்றதாகவும், குறிப்பாக நுண்கணிதம், முக்கோணவியல் பாடங்கள் கடினமானதாக இருந்ததாகவும் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கையில் 2026-ஆம் கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, தேர்வை சரியாக எழுதாத ஏராளமான மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், பாடத்தில் தவறியவர்கள், மதிப்பெண் குறைவாகப் பெற்ற பலரும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் சி.எஸ்.மனோகரன் கூறும்போது, இந்த ஆண்டு கணிதப் பாடத்துடன் அறிவியலும் கடினமானதாகத்தான் இருந்தது. கடந்த ஆண்டுகளில் 495 மதிப்பெண்களுக்கு மேல் பல மாணவர்கள் பெற்று வந்தனர். ஆனால், இந்த ஆண்டு 490-க்கும் மேல் பெற்றவர்களையே அரிதாகவே காணமுடிகிறது. கணிதப் பாடத்தால் பல மாணவர்களின் மொத்த மதிப்பெண்ணில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. பல மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பித்திருப்பதாகக் கூறுகின்றனர். தற்போதுதான் தேர்வு முடிவு வந்துள்ளது; எனவே, விண்ணப்பித்துள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை இனிதான் தெரியவரும் என்றார்.
கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியின் தாளாளர் அசோக் சங்கர் கூறும்போது, எங்கள் பள்ளியில் கணிதத்தில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. அதிகபட்ச மதிப்பெண்ணே 99 -ஆகத்தான் உள்ளது. துணைத் தேர்வு உடனடியாக நடத்தப்படும் என்பதால் கணிதத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் மனநிலையில் ஏராளமான மாணவர்கள் இருக்கின்றனர்.
கணிதம் காரணமாகவே கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவான மொத்த மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. அதேநேரம் என்னைப் பொருத்தவரை மறு தேர்வுக்குச் செல்வது தேவையற்றது, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் கவனம் செலுத்தலாம். இரண்டு பொதுத் தேர்வு என்பதாலேயே அதிகமானோர் மறுதேர்வுக்குச் செல்ல நினைக்கின்றனர் என்றார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுகளின்படி, குறைந்தபட்சம் 2 பாடங்களில் தோல்வியுறுபவர்கள் அல்லது 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் உடனடியாக துணைத் தேர்வு எழுதி அடுத்த வகுப்பைத் தொடரவும், மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்.
இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன்படி மே 15-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு முதல் முறையாக துணைத் தேர்வு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


