திருச்சி மாவட்டம், திருச்செந்துறையில் சூளுரைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கலைக்கோவன் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி-கரூர் சாலையிலுள்ள திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் முற்சோழர் காலத்தில் அரிஞ்சயசோழரின் தேவியும், கொடும்பாளூர் இளவரசியுமான பூதிஆதித்தபிடாரியால் கட்டப்பட்ட கற்றளியாகும். இக்கோயிலில் முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை அர. அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் மு. நளினி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். இக்கோயிலின் வெளிச்சுற்றின் வடக்குப்பகுதியில் உள்ள மண்டபத்தின் சுவர்களிலும், மண்மேட்டிருந்த கீழ்ப்பகுதியிலும் இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பல திருப்பணிகள் காரணமாகத் துண்டுகளாகச் சிதறியுள்ள பிற்சோழர் காலக் கல்வெட்டுகள்இரண்டு, மீகாமன் என்னும் சிற்றரசரிடம் பணியாற்றியுள்ள கைக்கோள வீரர்கள் இருவரின் வீரச்சூளுரைகளைப் பதிவு செய்துள்ளன.
அரசர் மீகாமனின் மெய்க்காவலராகப் பொதுக்காலம் 12 ஆம் நூற்றாண்டில் பொறுப்பேற்ற அம்மையாழ்வான் திருப்பிலாமாராயனான அழகியசேமன், அரசர் உயிரைக் காப்பாற்ற முடியாமல் வாழ நேர்ந்தால், தன் உடன் பிறந்தாளான குணச்சாளுக்குத் தான் கணவனாவது எத்தனை இழிவானதோ, அத்தகு இழிவு தனக்கு உண்டாகட்டும் என்று திருச்செந்துறைக் கோயில் இறைவன் முன்பு சூளுரைத்தார்.
இதற்கு உறுதியேற்றவர்கள் தங்களது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலையில், சமூகத்தால் ஏற்கப்படாத, இழிவாகக் கருதப்படும் தவறான உறவுகளைக் கொண்டிருப்பாருக்கு இணையாகவே கருதப்படுவர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
இதே போன்றதொரு செய்தியைத் தரும் மற்றொரு கல்வெட்டு இக்கோயிலில் பணியாற்றிய தேவரடியாள் ஆழ்வியை அறிமுகப்படுத்துகிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் பதிவாகியிருந்தபோதும், கோயில் தேவரடியாரைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டாக இதைக் குறிக்கலாம். இக்கோயிலின் தலமரமான பலா இங்குள்ள சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
தலமரத்தின் பெயரைத் தன் பெயரில் ஒரு பகுதியாகச் சூளுரைத்த கைக்கோள வீரர் திருப்பிலாமாராயன் கொண்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
பொதுக்காலம் 1517-இல் பொறிக்கப்பட்டுள்ள கிருஷ்ணதேவராயரின் வரி விலக்கு கல்வெட்டின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.
பெருமண்டத்துக்கு முன்னுள்ள தரையில் பாவப்பட்டுள்ள கல்லில் தில்லைநாயகபட்டன் திருச்செந்துறை உகந்தடுமை கொண்டான் நம்பி என்பவரின் மகன் முத்துநம்பி இக்கோயிலில் எப்போதும் சேவையிலிருக்கும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கள ஆய்வுக்கு கோயில் சிவாச்சாரியார் மு. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர். புதிய கல்வெட்டுகள் பற்றி கல்வெட்டுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


