துறையூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

துறையூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தின் செயல்அலுவலருக்கு எதிராக பணியாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்புப் போராட்டத்தின்போது தீக்குளிக்க முயற்சித்தவர்.
உள்ளிருப்புப் போராட்டத்தின்போது தீக்குளிக்க முயற்சித்தவர்.

துறையூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தின் செயல்அலுவலருக்கு எதிராக பணியாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறாக் கோயில்களின் அலுவலகம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஸ்ரீநந்திகேஸ்வரர் கோயில் வளாகத்தில் இயங்குகிறது. இங்கு 7 நிரந்தரப் பணியாளர்களும் 10க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் உள்ளனர். இங்கு செயல் அலுவலராக முத்துராமன் உள்ளார். இவர் பணியிட மாறுதலில் துறையூருக்கு நியமிக்கப்பட்ட பிறகு கோயில் பணியாளர்களுடன் இணக்கமாக நடக்கவில்லை என்றும், பணியாளர்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டி அவமதிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பெருமாள் கோயில் பட்டாச்சாரியர் ஒருவருக்கும், வேணுகோபால் சுவாமி கோயில் மெய்காவலர் தனபாலுக்கும் இடையே அடிவாரத்தில் நிலப் பிரச்னை இருப்பதாகவும், பட்டாச்சாரியர் கொடுக்கும் பாரபட்சமான தகவலின் அடிப்படையில் மெய்காவலர் தனபாலை செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள சேகர் என்ற பணியாளரை ஒழுங்காக பணி ஓய்வு பெற மாட்டீர்கள் என்றும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் தனபாலின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் பணியாளர்களுக்கு எதிராக செயல்படும் செயல் அலுவலரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் தனது குடும்பத்தினருடன் தனபாலும் மற்ற பணியாளர்களும் சேர்ந்து துறையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு  நேற்று உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். அப்போது யாரிடமும் சொல்லாமல் சேகர் ஆவேசமாக வெளியில் சென்று பெட்ரோல் வாங்கி வந்து யாரும் எதிர்பாராதபோது தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

அங்கிருந்த செயதியாளர் அருண் அவர் கையிலிருந்த தீப்பெட்டியை விரைவாக பிடுங்கி தூரமாக வீசினார். அந்த நேரத்தில் மற்ற பணியாளர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் துறையூர் நகர திமுக செயலாளருமான ந. முரளி ஆகியோர் பணியாளர்களிடம் நேரிலும், செயல் அலுவலரிடம் செல்லிடப்பேசியிலும் பேசினர்.

தகவல் அறிந்து திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சனனும், செயல் அலுவலர் முத்துராமனும் துறையூருக்கு நேரில் சென்றனர்.  அங்கிருந்த கட்சியினரிடம் இது எங்கள் பிரச்சினை நானே விசாரிக்கிறேன் என்று கூறி கட்சியினரை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் திமுகவினருக்கும் இணை ஆணையருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜா திமுகவினரை பிரச்னை வேண்டாம் எனக் கூறினார். திமுகவினர் வெளியேறி கோயில் வளாகத்தில் கொந்தளிப்புடன் நின்றனார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை அலுவலகத்துக்குள் அழைத்து இணை ஆணையர் பேசினார். இதனால் கோயில் வளாகத்தில் பதட்டமான சூழலையும், அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும்பரபரப்பையும் ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com