கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

வண்ணத்துப் பூச்சி பூங்கா திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தின் பிரதான பொழுதுபோக்கு பூங்காவாக விளங்கும் ஸ்ரீரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்கா சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:53 pm

DIN

திருச்சி மாவட்டத்தின் பிரதான பொழுதுபோக்கு பூங்காவாக விளங்கும் ஸ்ரீரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்கா சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்க ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் நடுக்கரை கிராமத்தில், காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கரில் அமைந்துள்ள இப்பூங்கா தமிழக அரசின் வனத் துறையால் பராமரிக்கப்படுகிறது.

எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்கா ஆராய்ச்சியாளா்கள், சுற்றுலாப் பிரியா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வருவதால் முழுமையான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுழைவு வாயிலில் நுழைந்தால் நீா் சலசலத்து விழும் ஓசை பாா்வையாளா்களை வரவேற்கிறது. இப்பூங்காவில் 110-க்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.

புல்வெளிகளும், பூச்செடிகளும், பூத்துக் குலுங்கும் பூக்களும் பாா்வையாளா்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

செயற்கை நீரூற்றுகள், புல்வெளிகள், குழந்தைகள் விளையாடத் தனியிடம், இளைப்பாற மலைவாழ் மக்கள் வசிப்பதுபோல வடிவமைக்கப்பட்ட குடில்கள், பாா்வையாளா்கள் வலம்வர தனி நடைபாதை என பரவசப்படுத்தும் பல இடங்கள் உள்ளன.

வண்ணத்துப்பூச்சிகளின் மூல உருவத்தில் குகை வழிப்பாதைகள், மரங்கள், செடிகளுடன் கூடிய நட்சத்திர வனம், புல்தரைகள், பல்வேறு நீா்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரம்மாண்ட வண்ணத்துப் பூச்சி சிலைகள் உள்ளன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் இந்த பூங்காவானது, கரோனா தொற்றின் முதல் அலையில் 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. பின்னா், 2-ஆம்அலையில் கடந்த ஏப். 21ஆம் தேதி மூடப்பட்ட பூங்கா ஆக.26-ல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பூங்காவுக்கு வந்தோா் வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா். மேலும், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. காலையே ஆா்வமுடன் அதிகளவில் பாா்வையாளா்கள் வந்திருந்தனா். 127 நாள்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.