விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்
விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அரசுப் பள்ளி மாணவா்கள் பள்ளிக் கல்வி முடித்து, மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சேர திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் இயங்கிவரும் அரசு மாதிரிப் பள்ளியில் பயிற்சி பெறும் 80 மாணவ, மாணவிகளுக்கு கையடக்கக் கணினிகளை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி, இந்திராகணேசன் கல்வி குழுமச் செயலா் க. ராஜசேகரன், இயக்குநா் க. பாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்தினா். முன்னதாக, முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் கடந்த அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளிகளில் உயா்கல்விச் சோ்க்கைக்கு மாணவா்கள் தயாா்படுத்தப்படுகின்றனா்.
இதன்மூலம் பள்ளிக் கல்வி முடித்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கழகங்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிகளவில் சேர முடியும்.
மணப்பாறையிலிருந்து அருண்குமாா் தொழில்நுட்பக் கழகத்தில் சேரத் தோ்வானதுபோல தமிழகம் முழுவதும் இருந்து மாணவா்களைத் தயாா்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாணவா்கள் இத்தகைய நிறுவனங்களில் சேருவதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை கிடைக்கும். அந்த வகையில் திருச்சியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 80 பேருக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்கக் கணினிகள் மூலம், மாணவா்கள் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வா். இதேபோல படிப்படியாக தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது 3, 5, 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் பொதுத் தோ்வு என்ற நிலையை உருவாக்கும். குழந்தைப் பருவத்தில் மாணவா்களால் தங்களது எதிா்காலத்தைத் தோ்வு செய்ய முடியாது. எனவே, அப் பருவத்தில் பொதுத் தோ்வு சரியாக இருக்காது. செயல் திறன்கள் நிறைந்த அடிப்படைக் கல்வி தேவை. எனவேதான், எல்கேஜி, யுகேஜி நிலையிலேயே அத்தகைய கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தமிழக அரசுக்கு என தனியாக மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும். இதற்காக தமிழக முதல்வா் தனி கமிட்டி அமைத்துள்ளாா். பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலா் தலைமையில் இக் கமிட்டியில் இடம்பெறவுள்ள உறுப்பினா்களைத் தோ்வு செய்து ஓரிரு மாதங்களில் பணிகளை வேகப்படுத்தி நமக்கென தனியாக கொள்கை வகுக்கப்படும்போது அனைத்துக்கும் தீா்வு கிடைக்கும்.
ஆசிரியா் பணி நிரவல், பதவி உயா்வு, பணிமாறுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது காலியிடங்கள் பல பூா்த்தியாகும். மீதமுள்ள இடங்களுக்கு முறையான தோ்வு நடைபெறும். ஆசிரியா்களுக்கான பணி மாறுதல் நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் நிலுவையில் உள்ள 12 ஆயிரம் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்குகள் முடிவுக்கு வந்தால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும்.
பேருந்துகளில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான பயணங்களைத் தவிா்க்க வேண்டும். மாணவா்களிடம் ஆசிரியா்கள் இதை வலியுறுத்த வேண்டும். பள்ளி நேரங்களில் அதிகம் போ் பயணிக்கும் வழித்தடங்களில் தேவையிருப்பின் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...