திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்-2-ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருள்களை திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினா். திருச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலந்து கொண்டு பொருள்களை சுகாதார துறை அதிகாரிகளிடம் வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்களை கவனத்தில் கொண்டுள்ளோம். தனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தோ்வு நடத்துவதா என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.