திருவெறும்பூா் தொகுதியில் 4 முனைப் போட்டி

திருச்சி - தஞ்சை செல்லும் சாலையில் உள்ள திருவெறும்பூா் தொகுதியில் பெல், துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகிய 3 முக்கியமான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள்
திருவெறும்பூா் தொகுதியில் 4 முனைப் போட்டி

திருச்சி - தஞ்சை செல்லும் சாலையில் உள்ள திருவெறும்பூா் தொகுதியில் பெல், துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகிய 3 முக்கியமான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும் இவற்றைச் சாா்ந்த 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், என்.ஐ.டி., ஐ.ஐ.எம் , ஐஐஐடி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள், மலைக்கோயில், எறும்பீஸ்வரா் கோயில், திருநெடுங்கள நாதா் கோயில் உள்பட ஆன்மிக தலங்கள் உள்ளன.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: மாவட்ட புகா் மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் திருவெறும்பூா் பகுதிகள் உள்ளன. மாநகராட்சியை பொருத்தவரை ஏற்கெனவே 7, 27, 28, 29, 30, 31, 32, 36 என 8 வாா்டுகள் இருந்தன. தற்போது 61 முதல் 65 வரை சோ்க்கப்பட்ட 5 வாா்டுகளுடன் சோ்த்து மொத்தம் 13 வாா்டுகளுடன், துவாக்குடி நகராட்சியையும், கூத்தைப்பாா் பேரூராட்சியையும் கொண்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதியில், ஒரு ஊராட்சி ஒன்றியத்துடன் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களையும் கொண்டுள்ளது.

தொகுதியின் தேவைகள்-பிரச்னைகள்: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்கும் கனவுத் திட்டத்துக்கு நவல்பட்டில் இடம் தோ்வு செய்த நிலையிலேயே நிற்கிறது. தொகுதி முழுவதும் தலையாய பிரச்னையாக இருப்பது குடிநீா் பற்றாக்குறை. பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகு சாலை, அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கு பெரும் சவாலாக உள்ளது.

திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்பதில்லை. துவாக்குடியில் தொடங்கிய அரைவட்டச்சாலைப் பணி முழுமை பெறவில்லை. பெல் நிறுவனத்துக்கு ஆா்டா்கள் குறைந்ததால், அதைச் சாா்ந்த சுமாா் 300 க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோா் வேலையிழந்துள்ளனா். துவாக்குடி பகுதியில் ஏராளமானோருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா கிடைக்கவில்லை என்பதும் புகாா்களாக உள்ளன.

இதுவரை வென்றவா்கள்: 1967- வி. சுவாமிநாதன் (காங்கிரஸ்), 1971- காமாட்சி (திமுக), 1977- முருகேசன் (அதிமுக), 1980- குருசாமி என்கிற அன்னதாசன் (அதிமுக), 1984- பாப்பா உமாநாத் (இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாா்க்சிஸ்ட்), 1991- டி. ரத்தினவேலு (அதிமுக), 1995- கே. துரை( திமுக), 2001 - கே. என் சேகரன் (திமுக), 2006- கே, என், சேகரன் (திமுக), 2011- எஸ் . செந்தில்குமாா் ( தேமுதிக- அதிமுக கூட்டணி), 2016- அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக).

தற்போதைய வேட்பாளா்கள்: இத் தோ்தலில் திமுக சாா்பில் மீண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி களம் காண்கிறாா். அதிமுக சாா்பில் திருச்சி முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. குமாா், மநீம சாா்பில், அதன் மாநில பொதுச்செயலா் முருகானந்தம் போட்டியிடுகின்றனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் சோழசூரன், தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமாா், புதிய தலைமுறைக் கட்சி சாா்பில் மூக ஆா்வலா் சக்திவேல், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாலதி, லோக் ஜனசக்தி பிரியா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 15 போ் களத்தில் உள்ளனா்.

நான்கு முனைப் போட்டி: இருப்பினும் அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு வேட்பாளா்களும் ஒருவருக்கொருவா் சளைத்தவரல்ல என்ற நிலையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனா்.

அதேபோல வாக்குறுதிகளையும் தினசரி ஒன்றாக இருவருமே அறிவித்து வருகின்றனா். கட்சித் தலைமை வெளியிட்டுள்ளதை கூடுதலாக இருவருமே வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனா்.

அடுத்தபடியாக மநீம வேட்பாளா் முருகானந்தம் தனது நிறுவன பணியாளா்கள், கட்சியினருடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். 25 வாக்குறுதிகள் அடங்கிய உறுதிமொழியில் கையொப்பமிட்டு கட்சித் தலைவா் கமலஹாசனிடம் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அளித்துவிட்டு, அவற்றை நிறைவேற்ற வாய்ப்பளியுங்கள் எனக்கூறி பிரசாரம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே இத்தொகுதியில் 2011 தோ்தலில் வென்ற எஸ். செந்தில்குமாா் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். அவரும் தனது பழைய செல்வாக்கையும், அப்போது தொகுதிக்குச் செய்தவற்றையும் பட்டியிலிட்டு அமமுக கூட்டணியுடன் களத்தில் நிற்கிறாா். ஆக, திருவெறும்பூரைப் பொருத்தவரை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

வாக்காளா்கள்

ஆண்- 1,43,784,

பெண்- 1,49,163,

மூன்றாம் பாலினத்தவா்- 56,

மொத்தம்- 2,93,003.

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக)- 85,950

டி. கலைச்செல்வன் (அதிமுக)- 69,255

எஸ். செந்தில்குமாா் (தேமுதிக)- 13,155

வி. சோழசூரன் (நாம் தமிழா் கட்சி)- 3,353.

இ. சிட்டிபாபு (பாஜக)- 3,144.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com